செங்கல்பட்டு, நவ.2: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த தெரல்லிமேடு பகுதியில் செயல்படாமல் பாழடைந்து கிடந்த குழாய் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்களில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவென வேகமாக தொழிற்சாலை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் உடனடியாக மகேந்திராசிட்டி தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு அலுவலர் வீரராகவன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கடுமையான கரும்புகை சூழ்ந்தது. இச்சம்பவம் நடந்த இடம் செங்கல்பட்டு-ஸ்ரீபெரும்புதூர் மாநில நெடுஞ்சாலை என்பதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடுமையான புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மூக்கை மூடியபடியே அப்பகுதியைக் கடந்து சென்றனர். இந்த தீ விபத்து காரணமாக தீயணைப்பு துறையினர் சிங்கப்பெருமாள்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


