Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாமல்லபுரம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நாளை கொண்டாட்டம்: லட்சக்கணக்கான இருளர் மக்கள் குவிந்தனர்

மாமல்லபுரம், மார்ச் 2: உலக புகழ்பெற்ற கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் மாசிமக தீர்த்தவாரி இருளர் இன மக்களால் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இருளர் இன மக்கள் தங்கள் குல தெய்வமான கன்னியம்மனை வழிபடுவதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் மாசிமக தீர்த்தவாரிக்கு 2 நாட்களுக்கு முன்பே மாமல்லபுரம் வந்தனர்.

பின்னர், அனைவரும் கடற்கரையில் 1000த்துக்கும் மேற்பட்ட குடிசைகள் அமைத்து விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்தனர். இவர்கள் சமைத்து சாப்பிடுவதற்கு தேவையான பாத்திரங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்ததால் கிழக்கு ராஜவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், நாளை காலை (3ம் தேதி) மாசி பவுணர்மியையொட்டி கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

மாசிமகத்தையொட்டி மாமல்லபுரம் வந்து கடற்கரையில் தற்காலிக குடிசைகள் அமைத்து, தங்கி உள்ள இருளர் மக்கள் பயன்படுத்தும் வகையில், கடற்கரையையொட்டி மாமல்லபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் 15 மொபைல் கழிப்பறைகள், 10 குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு, அதற்கு தேவையான தண்ணீர் லாரி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் தூய்மைபடுத்தும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

இதனையடுத்து, நேற்று மதியம் மாமல்லபுரம் நகராட்சி ஆணையர் வித்யா ஸ்ரீ, நகராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், தாசில்தார்கள் தேவேந்திரன், வாசுதேவன் ஆகியோர் மொபைல் கழிப்பறைகளின் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், ஒவ்வொரு கழிப்பறையையும் சுத்தம் செய்வதற்கு 2 பேர் என சுழற்சி முறையில் தேவையான பணி ஆட்கள் இருக்க வேண்டும், கழிப்பறை எண்ணிக்கையை அதிகபடுத்த வேண்டும், குடிநீர் தொட்டிக்கு தேவையான குடிநீரை லாரிகள் மூலம் தடையின்றி நிரப்ப வேண்டும், குப்பைகள் சேராமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும், யாரும் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும், அதற்கு மாற்றாக மஞ்சபை மட்டுமே பயன்படுத்த சொல்ல வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர் சுபாஷினி, விஏஓ விமல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தடையின்றி குடிநீர் ஆணையர் உறுதி

இருளர் மக்கள் பயன்படுத்தும் வகையில் இன்றும், நாளையும் தடையின்றி குடிநீர் வழங்கப்படும் எனவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் ஆணையர் வித்யா  தெரிவித்துள்ளார்.

இன்று தெப்ப உற்சவம்

மாசி பவுர்ணமியையொட்டி கடற்கரை செல்லும் வழியில் உள்ள புஷ்கரணி தெப்பக்குளத்தில் மாமல்லபுரம் வியாபாரிகள் தெப்ப உற்சவ கமிட்டி சார்பில் இன்று இரவு 7 மணிக்கு வாண வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க போதிய போலீசாரை நியமிக்க வேண்டும், இன்று இரவு தெப்ப உற்சவம், நாளை காலை கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறவுள்ளது. இதில், ஆண்களை காட்டிலும் அதிகளவில் பெண்களே வருவார்கள். இதனை, தங்களுக்கு சாதகமாக்கி மர்ம நபர்கள் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, பெண்களை கேலி கிண்டல் செயலில் ஈடுபட கூட்டமாக வருவார்கள். இதனால், மாவட்ட எஸ்பி தெப்பக்குளம், கடற்கரை என இரண்டு இடங்களில் பாதுகாப்பை பலபடுத்தும் வகையில் போதிய போலீசாரை நியமிக்க வேண்டும் என உள்ளூர் பெண்கள் வலியுறுத்துகின்றனர்.

போதிய உயிர்காப்பாளர் நியமிக்க வேண்டும்

மாமல்லபுரத்தில் நாளை காலை கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி தலசயன பெருமாள் கோயில் சார்பாக வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. தலசயன பெருமாள், வராக பெருமாள் மற்றும் சக்தரத்தாழ்வார் ஆகியோர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். பின்னர், சக்கரத்தாழ்வாரை கடலில் புனித நீராட்டிய பிறகு பக்தர்கள் அனைவரும் கடலில் புனித நீராடி கோவிந்தா கோஷத்துடன் சாமியை வணங்குவார்கள். எனவே, கடலில் புனித நீராடும்போது உயிரிழப்பை தடுக்கும் வகையில், போதிய உயிர்காப்பாளர்களை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.