அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவை, நவ.28: அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2 ஆண்டுகளுக்கான துணை கலெக்டர் பட்டியல், நடப்பாண்டிற்கான மாவட்ட வருவாய் அதிகாரி பட்டியல் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர். மேலும், கலெக்டர் அலுவலக தரை தளத்தில் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் தொடர்பாக சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் கூறுகையில்,‘‘தற்போதைய அரசு பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள பணியிடங்களை கலைத்து அறிவித்து விட்டது. தற்போது நகர்புற நிலவரித்திட்ட பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, காலி பணியிடங்கள் நிரப்படாததால் கூடுதல் பணி சுமையுடன் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, வருவாய் துறை பணியிடங்களை அரசு கலைக்க கூடாது. மேலும், வருவாய் துறை ஊழியர்களுக்கு அதீத பணி பணி நெருக்கடி வழங்குவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார். இதில் ஏராளமான வருவாய் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.