பெரம்பலூர்,ஜூலை 8: பெரம்பலூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் 20 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகர் கூட்ட அரங்கில் மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று(7ம்தேதி) திங்கட் கிழமை காலை பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்டக் கலெக்டர் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் வருவாய்த் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 01 பயனாளிக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் மாவட்டக் கலெக்டர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.