தா.பேட்டை, அக்.29: திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலை பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன், பேரூராட்சி தலைவர் செளந்தரராஜன், நகர செயலாளர் தர்மராஜ், நிர்வாகி பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் தர்மராஜ், சகுந்தலாதேவி உள்ளிட்ட பலர் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பேசினர். அப்போது மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 126 மாணவர்களுக்கும், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 140 மாணவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 266 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் பேரூராட்சி தலைமை எழுத்தர் சம்பத், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


