சிஎஸ்ஐ பள்ளியில் குழந்தைகள் தின விழா
ஈரோடு, நவ.15: ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் பிராங்கிளின் பிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளருமான எஸ்.எம்.சாதிக் பங்கேற்று மாணவர்கள் எதிர்கால சிந்தனை மற்றும் லட்சியத்துடன் படிக்க வேண்டும்,
தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்களுக்காக வழங்கி வருகிறது. அதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஊக்கமளித்து பேசினார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், விடுதியில் படிக்கும் 300 மாணவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், பள்ளியின் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.