ஈரோடு, நவ.15: பெருந்துறை அடுத்த வெங்கமேட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கபிள்ளை (71). மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், கடந்த 13ம் தேதி மதுப்போதையில் இருந்துள்ளார். அப்போது, தென்னை மரத்திற்கு வைத்திருந்த சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து வந்த உறவினர்கள், அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சங்கபிள்ளை உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் விசாரித்தனர். இதேபோன்று, பெருந்துறை அடுத்த திங்களூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சென்னியப்பன் (62). அரிசி வியாபாரம் செய்து வந்த அவர், நுரையீரலில் கேன்சர் இருப்பதால் கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், விரக்தியில் இருந்து வந்த சென்னியப்பன், நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
