சத்தியமங்கலம், நவ.15: புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் மலைக்குன்றில் பதுங்கியுள்ள இரண்டு சிறுத்தைகளில் ஒரு சிறுத்தை விவசாய தோட்டத்தில் நடமாடியதாக மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் கிராமத்தில் பட்டப் பகலில் புகுந்து ஆடுகளை வேட்டையாடியதோடு அங்குள்ள மலைக்குன்றில் பதுங்கியது.
சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த நிலையில், அதே மலைக்குன்றில் மீண்டும் ஒரு சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் 2 சிறுத்தைகளைப் பிடிக்க இரண்டு கூண்டுகளை வைத்தனர்.
இந்நிலையில் நேற்று காலை மாராயிபாளையம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள பொன்னுச்சாமி என்பவரது விவசாய தோட்டத்தில் நடமாடியதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் விவசாய தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விவசாய தோட்டத்தில் சிறுத்தையின் கால் தடம் எதுவும் பதிவாகவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
