ஈரோட்டில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் பெறுகின்றன
ஈரோடு, நவ. 13: தமிழ் நாட்டில், தொடக்க கல்வித் துறையின் கீழ் அரசு பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை, கல்வித் துறையில் உள்ள உயர்மட்டக்குழு ஆய்வு செய்து, அதில் 3 பள்ளிகளை தேர்வு செய்து கேடயம் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதில், ஈரோடு மாவட்டத்தில் காசிபாளையம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளி, ஊராட்சிக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியும்,சென்னியங்கிரி வலசு நடு நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வாகி உள்ளன. இப்பள்ளிக்கான விருதை நாளை (14ம் தேதி), காரைக்குடியில் உள்ள அழகப்பா மேல் நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கவுள்ளார்.
சிறந்த பள்ளிகளாக தேர்வானதையொட்டி 3 பள்ளிகளின் பள்ளித்தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அரசுக்கு தங்களது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.