பவானிசாகர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 88 மனுக்களுக்கு உடனடி தீர்வு
சத்தியமங்கலம், ஆக. 7: பவானிசாகர் பேரூராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 88 மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது. பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள உத்தம தியாகி ஈஸ்வரன் மணிமண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை, சத்தியமங்கலம் தாசில்தார் ஜமுனாராணி, பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன், செயல்அலுவலர் ஜெயந்த்மோசஸ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
முகாமில் வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மற்றும் வீட்டுமனை பட்டா ஆகியவற்றிற்கான மனுக்கள் அதிகளவில் பெறப்பட்டது.
இதில் மொத்தம் 669 மனுக்கள் பெறப்பட்டதாகவும், 88 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டதாகவும், மீதமுள்ள 581 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பவானிசாகர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மகேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.