பு.புளியம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்
சத்தியமங்கலம், ஜூலை 31: புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள செல்லம்பாளையம் தளபதி நகரரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (51). நேற்று காலை ஆறுமுகத்தின் மனைவி கவிதா வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு பூப்பறிக்கும் பணிக்கு சென்று விட்டார். காலை 9 மணிக்கு ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு மனைவியிடம் வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு நம்பியூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே கவிதா பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த கடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டிக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.20 ஆயிரம், கால் பவுன் தங்க கம்மல், 2 செட் வெள்ளி கொலுசு ஆகியவை திடுடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.