Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சமவெளி பள்ளி ஆசிரியர்களுக்கு மலை சுழற்சி முறை: தமிழக அரசை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோபி, ஜூன் 16: சமவெளி பள்ளி ஆசிரியர்களை மலை பகுதி பள்ளிகளில் பணிபுரிய மலை சுழற்சி முறையை கொண்டு வந்துள்ள தமிழக அரசை கண்டித்து கோபி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் அரசு ஆரம்ப பள்ளிகள், தொடக்க பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதே போன்று நகராட்சிகள் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு நகராட்சியிலும் நகராட்சி ஆரம்ப பள்ளி, நகராட்சி தொடக்கப்பள்ளி, நகராட்சி நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றொரு நகராட்சி பள்ளிகளுக்கு மட்டுமே பணி மாறுதலில் செல்வது வழக்கம். அதே போன்று ஒவ்வொரு ஆண்டும் கவுன்சிலிங் நடைபெறும் போது, நகராட்சி பள்ளி ஆசிரியர்களை தவிர மற்று ஆசிரியர்கள் கலந்து கொண்டு மலை பகுதி பள்ளிகளுக்கு பணி மாறுதலில் அனுப்பி வைக்கப்பட்டனர். நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி உயர்வு கூட இல்லாமல் பணி ஓய்வு பெறும் நிலையே உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அரசாணை எண் 243 கொண்டு வரப்பட்டது. அந்த அரசாணை கொண்டு வரப்பட்ட போது நகராட்சி பள்ளிகள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் கவுன்சிலிங் மூலமாக மலை பகுதியில் பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த அரசாணைக்கு நகராட்சி பள்ளி ஆசிரியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டாலும் அதை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு நகராட்சி பள்ளி ஆசிரியர்களையும் மலை சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அளவில் கோபி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம் நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே

இந்த அரசாணை மூலமாக கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. சத்தியமங்கலத்தில் 3 நகராட்சி தொடக்கப்பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி உள்ள நிலையில் இங்கு 28 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பினால் 28 ஆசிரியர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கோபியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் வட்டார செயலாளர் சேகர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ரமாராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசின் மலை சுழற்சி முறையை கைவிட வலியுறுத்தி உரையாற்றினார். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறுகையில்“மலை சுழற்சி முறையில் இதுவரை நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சேர்க்கப்படாத நிலையில் கடம்பூர் மலையில் உள்ள 12 தொணக்கப்பள்ளிகள், 10 நடுநிலைப்பள்ளிகளுக்கு கவுன்சிலிங் முறையில் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும். இலை என்றால் மாநில அளவில் ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறும்” என்றனர்.