சிபில் ஸ்கோர் முறையை ரத்து செய்யக் கோரி நெற்கதிர், கரும்புகளுடன் ரயில் மறியலுக்கு முயன்ற கொ.ம.தே.க.வினர்
ஈரோடு,ஜூலை28: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் சிபில் ஸ்கோர் முறையை ரத்து செய்யக் கோரி, ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் நெற்கதிர்,கரும்புகளுடன் ரயில் மறியலுக்கு முயன்றனர். தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்கடன் பெறுவதில் இருக்கும் சிபில் ஸ்கோர், என்.ஓ.சி குளறுபடிகளை ஒன்றிய, மாநில அரசு சரி செய்ய வலியுறுத்தியும், சிபில் ஸ்கோர் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நேற்று கொமதேக சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், தடையை மீறி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பு, நேற்று போலீசார் தடுப்புகள் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது, சிபில் ஸ்கோர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் என்.ஓ.சி குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களுடன் வந்திருந்த விவசாயிகள் தங்களது கையில் நெற்கதிர், கரும்புகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போராட்டத்தில், கொமதேக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா, மாநில பொதுச்செயலாளர் சக்தி நடராஜ், பொருளாளர் பாலு, காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், மதிமுக மாவட்ட செயலாளர் கோபு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சித்திக், தமிழகத் தொழிலாளர் நலக் கட்சித் தலைவர் மாகாளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.