‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தினருடன் கலெக்டர் சந்திப்பு
ஈரோடு,ஜூலை28: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவன உரிமையாளர்களுடன் நடைபெற்ற ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி கலந்துரையாடினார். ஈரோடு மாவட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது வழிவகைகள், முன்னேற்றங்கள், சந்திக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர்.
மேலும், இக்கலந்துரையாடலில் மாவட்டத்தின் வளர்ச்சியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்கு முக்கியம் என்றும், நகரமயமாகும் இரண்டாம் நிலை நகரங்களில் எழும் சவால்களுக்கு புத்தாக்க தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும், சமூகத்தின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் சமூகமாற்றத்திற்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கலெக்டர் குறிப்பிட்டார். மேலும் ஏ.ஐ, மின்சார வாகனங்கள், ஹெல்த் டெக் உள்ளிட்ட முன்னேற்றம் வாய்ந்த துறைகளைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது தயாரிப்புகள், புதுமையான தொழில் நுட்பங்கள் மற்றும் நுகர்வோர் சேவைகளை சந்தைக்கு எவ்வாறு கொண்டு செல்ல முடியும் என்பது பற்றியும்கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (ஸ்டார்ட்அப்) குருசங்கர்,கோபிநாத், மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குநர் ஜெகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.