Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஈரோடு வெண்டிபாளையத்தில் மலை போல் குவிந்துள்ள குப்பைகள்: துர்நாற்றம் விசுவதால் மக்கள் அவதி

ஈரோடு, ஜூலை 31: ஈரோடு வெண்டிபாளையத்தில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையால் அப்பகுதியில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துர்நாற்றத்துடன் மஞ்சள் நிறத்தில் நீர் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வெண்டிபாளையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில், சேகரிக்கப்படும் குப்பைகள் வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மலை போல் காணப்படும் அந்த குப்பைக்கிடங்கில், அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவதால் சுற்று வட்டார பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த குப்பை கிடங்கை வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வெண்டிபாளையம் குப்பை கிடங்கால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு, நீர் துர்நாற்றத்துடன் மஞ்சள் நிறத்தில் வருவது அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 60வது வார்டு பொதுமக்கள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை, வெண்டிபாளையம் கிடங்கில் கொட்டப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டுவதால், சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீ., அளவிற்கு குப்பை துர்நாற்றம் வீசுவதால், இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

ஆனாலும், எங்களது கோரிக்கைகள் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, வெண்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆழ்துளை கிணற்றின் மூலம் எடுக்கப்படும் நிலத்தடி நீர், கடும் துர்நாற்றத்துடன் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதனால், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அப்படியே பயன்படுத்தினாலும் பொதுமக்கள் உடல்நலம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வெண்டிபாளையம் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.