Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காலிங்கராயன் பாசனத்திற்கு முதல் போகத்திற்கு ஆக.6ம் தேதி தண்ணீர் திறக்காவிட்டால் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு, ஜூலை 30: காலிங்கராயன் பாசனத்திற்கு முதல் போகத்திற்கு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி தண்ணீர் திறக்காவிட்டால், நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் சேதுராஜ், ஈரோடு நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 16ம் தேதி தண்ணீர் திறந்து, ஏப்ரல் மாதம் 30ம் தேதி நிறுத்த வேண்டும். இந்த ஆண்டு சீரமைப்பு பணி நடந்ததாலும், அணையில் நீர் இருப்பு குறைவு என்பதால் பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை. கரும்பு, வாழை, மஞ்சள், தென்னை உள்ளிட்ட பயிர்களை காக்க கடந்த 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் (28ம் தேதி) வரை உயிர் நீர் 15 நாட்களுக்கு திறக்கப்பட்டது.

இதில் கடந்த 24ம் தேதி தான் கடைமடைக்கு தண்ணீர் சென்று, கடந்த 4 நாட்களாக தண்ணீர் பயன்படுத்திய நிலையில் நேற்று முன்தினம் தண்ணீர் நிறுத்தப்பட்டது. காலிங்கராயன் பாசனப்பகுதியில் 15,750 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு அறிவிப்பு செய்தபடி தண்ணீர் செல்கிறது. அதேநேரம், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 3 டிஎம்சி வரை உயிர் நீர் கேட்டுள்ளனர். அதை நாங்கள் தடுக்கவில்லை. அதேநேரம் காலிங்கராயன் வாய்க்கால் பாசனப்பகுதியில் முதல் போக சாகுபடிக்கு வரும் ஆக.6ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி காலிங்கராயன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுத்தால், அன்றைய தினமே ஈரோடு நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் காலிங்கராயன் பாசன விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.