Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பட்ஜெட்டில் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி அறிவிக்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 30: நசியனூரில் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடியை பட்ஜெட்டில் அறிவிக்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு அடுத்த நசியனூரில் உள்ள நரக கூட்டுறவு கடன் சங்கம் முன்பு நேற்று அந்த வங்கியின் உறுப்பினர்கள், விவசாயிகள் பச்சை துண்டு அணிந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். பெரியவேலப்பன், கள் இயக்க நல்லசாமி, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் செங்கோட்டையன், துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழக முதல்வர் தேர்தலின் போது கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 5 ஏக்கருக்கு கீழ் உள்ளவர்களுக்கு முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெளிவாக அறிவித்தார். ஆனால், தற்போது தமிழ்நாடு அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

எனவே, மகாராஷ்டிரா அரசு 56 லட்சம் விவசாயிகளுக்கு 36 ஆயிரத்து 589 கோடி ரூபாய் கடன் தள்ளுபடியை பட்ஜெட்டில் அறிவித்ததை போல, தமிழ்நாடு அரசும் 14.22 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு சங்க விவசாய பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வரும் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திரளான விவசாயிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.