Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நீதிமன்ற உத்தரவை மீறி கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வசூல்

கோபி, ஆக.29: தமிழகத்தில் தனியார் வசமிருந்த கேபிள் டிவி அரசு கேபிளாக மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அனலாக் முறையில் இருந்த கேபிளை, டிஜிட்டல் முறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கேபிள் ஆபரேட்டர்கள், தங்கள் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் செட்டாப் பாக்ஸ் மூலமாக மற்றும் பணியை தொடங்கினர். அதுவரை ஒரு இணைப்பிற்கு வரியுடன் 21 ரூபாயை அரசுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தி வந்தனர். டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும் போது, ஏற்பட்ட குளறுபடிகளால் கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு மாதம் தோறும் செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அப்போதைய அரசு, அனலாக் முறையில் இருந்து முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாறும் வரை உள்ள இடைப்பட்ட காலத்திற்கு கட்டணத்தை செலுத்த வேண்டியது இல்லை என அறிவித்தது.

இதைத்தொடர்ந்து ஒரு வருட காலத்திற்குள் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டது. ஆனால் அந்த ஒரு வருட காலத்திற்கும் ஒரு இணைப்பிற்கு 21 ரூபாய் வீதம் ஒவ்வொரு கேபிள் ஆபரேட்டருக்கும் பல லட்சம் ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் உடனடியாக செலுத்த வேண்டும் என கடந்த ஆட்சியில் கூறப்பட்ட போது, கேபிள் ஆபரேட்டர்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும் காலத்திற்கு தொகை செலுத்த வேண்டியது இல்லை என்ற உத்தரவை காண்பித்ததை தொடர்ந்து கடந்த ஆட்சியில் நிலுவைத்தொகையை வசூலிக்க வில்லை. ஆனால், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, கேபிள் ஆபரேட்டர்களிடம் நிலுவையில் உள்ள தொகையை வட்டியுடன் வசூலிக்க வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 520 கேபிள் ஆபரேட்டர்களில் முதல்கட்டமாக ஒரு சிலரிடம் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் வீடுகளுக்கு சென்று உடனடியாக நிலுவைத்தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறிவிட்டு, கேபிள் ஆபரேட்டர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை கேட்டு குறித்து செல்கின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள், நேற்று கோபி, சத்தி, அந்தியூர், பவானி உள்ளிட்ட பல்வேறு தாலுகாவில் இருந்தும், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்க செயலாளர் செழியன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டு, கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று,

கோட்டாட்சியர் சிந்துஜாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,“கடந்த ஆட்சியில் நிலுவைத்தொகையை செலுத்த வேண்டாம் என்று கூறிய நிலையில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் எங்கெல்லாம் நிலுவைத்தொகை உள்ளதோ அதை எல்லாம் வசூலிக்க உத்தரவிட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவை காண்பித்த பிறகும் கட்டாயமாக நிலுவைத்தொகையை செலுத்த வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக மிரட்டி வருகின்றனர். இந்த கட்டாய வசூலை நிறுத்தா விட்டால் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.