Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செழித்து வளர்ந்த மரவள்ளி ரயிலில் பயணிகளிடம் திருட்டு: 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை

ஈரோடு, ஆக. 29: ஈரோட்டில் ரயிலில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஈரோட்டை சேர்ந்தவர் நாகராஜன் (81). ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதி. இவர் கரூர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சென்று வருவது வழக்கம். அதன்படி கடந்த 19ம் தேதி கரூர் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு, அங்கிருந்து ரயில் மூலம் ஈரோடு வந்தார். பின்னர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் சப்வே வழியாக நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த 2 பேர், நாகராஜன் மீது மோதிவிட்டு அவரது சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர்.

இதைத்தொடர்ந்து நாகராஜன் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, நாகராஜனிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஷ் என்கிற ஹரி பாஸ்கர் (29), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கவுதமன் (21) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல், நாகர்கோவில் மாவட்டம் எடாலகுடியை சேர்ந்தவர் உமர் (28). சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 24ம் தேதி அவரது மனைவி ரபீனா என்பவருடன் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தனர். தொடர்ந்து, ரயில் 25ம் தேதி அதிகாலை ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே சிக்னலுக்காக நின்றிருந்தது.

அப்போது, ஒரு வாலிபர் ரபீனாவிடம் இருந்த கைப்பையை பறித்து விட்டு தப்பி சென்றார். அதில், ஸ்மார்ட் போன் இருந்தது. இதுகுறித்து ரபீனாவின் கணவர் உமர் ஈரோடு ரயில்வே போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்த கோபி மகன் விஷ்ணு (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இதில், கைதான ஹரி பாஸ்கர் மற்றும் விஷ்ணு மீது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ரயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ரயில்வே எஸ்பி ராஜன் வாயிலாக மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்துள்ளார். விரைவில், இருவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட உள்ளனர் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.