ஈரோடு, ஆக. 26: பெருந்துறையில் 1.5 கிலோ கஞ்சாவுடன் வங்கதேசத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் எஸ்ஐ தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பணிக்கம்பாளையம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார்.
அவரை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் பகுதியை சேர்ந்த குத்தூஸ் அலி சேக் (58), என்பதும், அவரை சோதனை நடத்தியபோது, அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1.5கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.



