பவானி,ஆக.26: பவானி, மேற்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் மகன் பிரபு (25). இவரை, குடிபோதையில் 6 பேர் கும்பல் நேற்று முன்தினம் சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கிடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில், காயமடைந்த பிரபு பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, பவானி போலீசில் பிரபு அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டது பவானி, மண் தொழிலாளர் 2-வது வீதியை சேர்ந்த நவீன் குமார் (21), கல் தொழிலாளர் 2-வது வீதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (22), தந்தை பெரியார் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (25), காவேரி வீதியைச் சேர்ந்த பிரகாஷ் (எ) பிரகாஷ் (25), மேற்கு தெருவைச் சேர்ந்த மாணிக்கம் (26), வர்ணபுரம் 5-வது வீதியைச் சேர்ந்த கவின் (26) என்பது தெரியவந்தது.
நவீன் குமார் சித்தோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றவர்கள் பூக்கடைகளிலும், கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர். இதையடுத்து, 6 பேரையும் கைது செய்த பவானி போலீசார், பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



