Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெரும்பள்ளம் ஓடை கரையில் குப்பைகள் கொட்டினால் ரூ.500 அபராதம்

ஈரோடு,ஆக.26: தினகரன் செய்தி எதிரொலியாக, திண்டல் அடுத்த செம்பாண்டம்பாளையம் பெரும்பள்ளம் ஓடை கரையில் கொட்டப்பட்டிருந்த குப்பயை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. ஈரோடு மாநகராட்சியின் பிரதான நீராதாரமாக பெரும்பள்ளம் ஓடை விளங்குகிறது. சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு பகுதியில் உள்ள புங்கம்பாடியில் கீழ்பவானி கால்வாயின் கசிவுநீரில் இருந்து பெரும்பள்ளம் ஓடை தொடங்குகிறது. பின்னர் திண்டல், நல்லியம்பாளையம், முத்தம்பாளையம், சூரம்பட்டி, பெரியார் நகர், மரப்பாலம் வழியாக சென்று வெண்டிபாளையம் பீளமேடு என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில், திண்டல் அடுத்த காரப்பாறையில் இருந்து செம்மாண்டபாளையம் செல்லும் வழியில் உள்ள பெரும்பள்ளம் ஓடையில், இறைச்சிக் கழிவுகள் மற்றும் வீட்டில் அன்றாடம் சேகரமாகும் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி வந்தனர்.

இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. மேலும், இறைச்சி கழிவுகளை சாப்பிட வரும் தெருநாய்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்றனர். பெரும்பள்ளம் ஓடையில் உள்ள இறைச்சி மற்றும் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து, சமீபத்தில் தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியனது. அதன் எதிரொலியாக, பெரும்பள்ளம் ஓடை கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பையை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. மேலும், பொது இடங்கள் மற்றும் வடிகாலில் குப்பையை கொட்டக்கூடாது என்றும் குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவிப்பை மீறி குப்பை கொட்டப்பட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தில் பேனர் வைத்துள்ளது.