கோபி அருகே குருமந்தூர் பூதிமடைபுதூரில் கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திருட்டு அம்பலம்; விடிய விடிய காத்திருந்து கண்டுபிடித்த விவசாயிகள்; நீர்வளத்துறை அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு
கோபி, ஆக. 28: கோபி அருகே உள்ள குருமந்தூர் பூதிமடைபுதூரில் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகளே இரவு முழுவதும் விடிய விடிய ரோந்து சென்று தண்ணீர் திருட்டை கையும் களவுமாக கண்டுபிடித்தனர். அதிகாரிகளின் துணையுடன் தண்ணீர் திருடப்படுவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2,07,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த ஆண்டு பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து.
இதனால், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால், பாசன பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் உயிர் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் சிறப்பு நனைப்பிற்காக 15 நாட்களுக்கு இந்த வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் முழு அளவு தண்ணீர் திறந்து 10 நாட்களுக்கு மேலாகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேராததால் தண்ணீர் திருட்டு நடப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் தண்ணீர் திருட்டை தடுக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், விவசாயிகளே கடந்த இரண்டு நாட்களாக குழுவாக இரவில் விடிய விடிய ரோந்து சென்றனர்.
அப்போது, கோபி அருகே உள்ள குருமந்தூர் பூதிமடைப்புதூர் என்ற இடத்தில் மழை நீர் வடிகால் பாலத்தின் வழியாக 50க்கும் மேற்பட்ட குழாய்கள் மூலம் சிலர் தண்ணீரை உறிஞ்சி எடுப்பது தெரிய வந்தது. வாய்க்காலில் இருந்து தண்ணீரை குழாய் மூலம் உறிஞ்சு எடுத்து ஓடை வழியாக அருகில் உள்ள குளத்திற்கு திருட்டுத்தனமாக எடுத்துச்செல்வது தெரிய வந்தது. இது குறித்து விவசாயிகள் நீர்வளத் துறைக்கும், காவல்துறைக்கும் புகார் அளித்தனர். ஆனால், மூன்று மணி நேரம் தாமதமாக போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதிகாரிகள் துணையுடன் தண்ணீர் திருடப்படுவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், இதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி கால்வாய் கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழாய் மூலமாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாய்க்கால் கரையில் பந்தல் அமைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் தினேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தன்னாசிபுதூர் பகுதியில் தண்ணீர் திருட பயன்படுத்தப்பட்ட குழாய்களை அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினர். ஆனால், தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் தினேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது குறித்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி கூறுகையில், ‘‘கீழ்பவானி வாய்க்கால் பாசனத் திட்டத்தில் கடுமையான போராட்டத்துக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி உயிர் தண்ணீர் 15 நாளுக்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில தண்ணீர் திருட்டை தடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்திருந்தோம். காவல்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் நீர்வளத்துறை எதையும் கண்டு கொள்ளாமல் நீர் திருட்டுக்கு உடந்தையாக உள்ளது.அதன் அடிப்படையில் நேற்று 29.4வது மைலில் 50 குழாய்களை வைத்து தண்ணீர் திருடி உள்ளார்கள்.
இதனால், 10 நாட்களாகியும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. விவசாயிகள் நாங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இதை கண்டுபிடித்தும், இரவு நீர்வளத்துறைக்கு தொடர்பு கொண்டபோது 3 மணி நேரம் கழித்துதான் வந்தார்கள். அதற்குள் 150 பேர் சேர்ந்து அந்த குழாய்களை எடுத்து கொண்டு சென்று விட்டனர். மங்களப்பட்டி மற்றும் மற்ற கடைமடை விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். எனவே, இந்த குழாய் மூலம் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்த நீர்வளத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாசன பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து கடுமையான போராட்டத்தை நடத்துவோம்’’ என்றார்.



