Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சென்னிமலை அருகே பயனற்று கிடக்கும் இலங்கை தமிழர்களின் நிலம்

பெருந்துறை, ஜூன் 25: சென்னிமலை அருகே இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு பல ஆண்டுகளாக பயனற்று கிடக்கும் நிலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என ஜமாபந்தி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பெருந்துறையில் நேற்று பொதுமக்களின் குறைகள் குறித்த மனுக்களை பெறும் வகையில் ஜமாபந்தி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், சென்னிமலை அருகே மேலப்பாளையத்தை சேர்ந்த தமிழினியன் முருகேசன், மன்னர் மன்னன், ரவி ஆகியோர் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: சென்னிமலை குறுவட்டம், அட்டவணைப்பிடாரியூர் வருவாய் கிராமத்தில் 1993-94ம் ஆண்டு கால கட்டங்களில் தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு ஐந்தரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 450 சதுரடி மற்றும் 600 சதுரடி மனை நிலங்களாக பிரிக்கப்பட்டு இந்த மனைகள் சென்னிமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரைய ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.

தொடர்ந்து அந்த கிரைய ஆவணங்களை பொறுத்து குடியரசு தலைவருக்கு அடமான ஆவணங்களும் எழுதி பதிவு செய்யப்பட்டது. பின்னாளில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகளால் மேற்படி நிலங்களை கிரையம் வாங்கிய இலங்கை தமிழர்களால் அந்த இடத்தில் குடியேற முடியாமல் போனது. அவர்களும் தங்கள் வாழ்வாதாரங்களை தேடி வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். இதனை தெரிந்து கொண்ட சிலர், அந்த கேட்பாரற்ற பூமியை ஆக்கிரமிப்பு செய்ய முடிவு செய்து இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் அடையாள அட்டையை போலியாக உருவாக்கியும், மேற்படி கிரைய ஆவணங்கள் தீ விபத்தில் எரிந்து நாசமாகிவிட்டதாக போலியான சான்று ஆவணங்களை உருவாக்கியும் சிலர் தங்கள் பெயரில் கிரைய ஆவணங்களாக பதிவு செய்து கொண்டனர்.

ஆனால், அவர்கள் குறிப்பிட்டபடி மேற்படி கிரைய அசல் ஆவணங்கள் தீ விபத்தில் எரியவில்லை. மாறாக, ஈரோடு மாவட்ட காவல்துறையின் வசம் பாதுகாக்கப்படுகிறது என்ற உண்மையை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்ற வழக்கின் 16-4-2010 தேதியிட்ட தீர்ப்புரையிலும் உள்ளது.

போலி ஆவணம் பதிவுக்கு தாக்கலாகி உள்ளதை தெரிந்து கொண்ட நாங்கள் சென்னிமலை சார்பதிவாளரிடம் அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை சரிபார்க்க கோரி வாய்மொழியாக புகார் அளித்தோம். அதை ஏற்றுக்கொண்ட சென்னிமலை சார்பதிவாளர், அந்த ஆவணத்தை பதிவு செய்யாமல் நிலுவையில் வைத்தார்.

தொடர்ந்து சென்னிமலை ஒன்றியம் ஓட்டப்பாறை ஊராட்சியில் 2-2-2024 அன்று நடந்த கிராம சபை தீர்மானத்தில் அந்த நிலம் இலங்கை தமிழர்களுக்கு சொந்தமானது என்றும், அந்த நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யகூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, போலி சான்று ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்து உத்தரவிட்டு கேட்பாரற்ற அந்த பூமியை பூஜ்ஜியம் மதிப்பாக மாற்றி பொதுமக்கள் பயன்படும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.