Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உழவர் சந்தை சாலையை ஆக்கிரமித்து கடைகள்

ஈரோடு, ஜூன் 25: ஈரோடு சம்பத் நகரில் உழவர் சந்தை சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தையில் 100க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாபாரம் செய்ய பதிவு செய்துள்ளனர். இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும், தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்பட பல்வேறு காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சாலையோரங்களில் வியாபாரிகள் கடை அமைக்க கூடாது என விதிமுறை அமலில் உள்ளது.

ஆனால், அந்த விதிமுறைகள் பின்பற்றப்படாமல், உழவர் சந்தைக்கு முன்பாக உள்ள சாலைகளில், விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலையோரங்களில் காய்கறி கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால், உழவர் சந்தையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, உழவர் சந்தை அருகே செயல்பட்டு வரும் சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: உழவர் சந்தையில் அதிகாலை நேரத்தில் வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் போகிறது.

அதே நேரத்தில் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு மிகப்பெரும் இடையூறாக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக, அப்பகுதி மாறி வருகிறது. அதாவது, விவசாயிகளின் வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், சிலர் சந்தைக்கு வெளியே சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வருகின்றனர். 100 மீட்டர் தொலைவிற்கு கடைகள் அமைக்க கூடாது என வலியுறுத்தியும் கடைகள் அமைக்கின்றனர். எனவே, அதிகாலை நேரத்தில் உழவர் சந்தை செயல்படும் நேரத்தில் சாலையோரம் கடை அமைக்க அனுமதிக்க கூடாது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.