Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரோடு சட்டக் கல்லூரி சார்பில் நீதி தேவதை உலக சாதனை நிகழ்வு

கோபி: ஈரோடு சட்டக் கல்லூரி, இண்டஸ் கலை மற்றும் அறிவியல் சர்வதேச கல்லூரி,  சாய் சிந்து செவிலியர் கல்லூரி சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்தும், அது குறித்த சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு சட்டக்கல்லூரி மைதானத்தில் மாணவர்கள் தொடர் சங்கிலி முறையில் ‘நீதி தேவதையின்’ மனித உருவமைப்பை தத்ரூபமாக வடிவமைத்து புதிய உலக சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் தலைமையில், அறக்கட்டளை துணைத்தலைவர் டாக்டர்.கிஷோர் ரவிச்சந்திரன் மற்றும் இணைச்செயலாளர் சாரு ரூபா கிஷோர் முன்னிலையில் நடந்தது.

முன்னதாக, துணைத்தலைவர் காயத்ரி ரவிசந்திரன் மற்றும் இணைச்செயலாளர் அருண் பாலாஜி ஆகியோர் வரவேற்றனர். இந்த முயற்சியை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அமைப்பின் மேலாளர் அபிநயா ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ உலக சாதனையாக அறிவித்தார். இதில் ஈரோடு அரசு மாதிரிப் பள்ளி, ரிச்மண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீதாஞ்சலி ஆல் இந்தியா சீனியர் செகண்டரி ஸ்கூல், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நந்தா சென்ட்ரல் பள்ளிகளை சேர்த்து மொத்தம் 1,545 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி சமீனா இந்த உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை ஸ்ரீ சாய் சிந்துஅறக்கட்டளையின் சார்பில் அதன் துணைத்தலைவர் காயத்ரி ரவிசந்திரனிடம் வழங்கி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் ‘போக்சோ’ சட்டத்தின் முக்கியத்துவத்தையும், ஆபத்துக் காலங்களில் மாணவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய ‘1098’ என்ற அவசர உதவி மைய எண்ணின் அவசியத்தையும் குறித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து, முதுநிலை உரிமையியல் நீதிபதி ஸ்ரீவித்யா, ஈரோடு சட்டக் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் ஆலோசகர் டாக்டர். சி. நாராயணன், மாணவத் தலைவர் ரோஹித், செயலாளர் கோவர்தன கிரி மற்றும் முன்னாள் மாணவர் வெற்றி மணி பாரதி ஆகியோருக்குச் சிறப்புப் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார்.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, உலகச் சாதனையில் பங்கேற்ற அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் செல்வ விக்னேஷ், பெரியநாயகி மற்றும் கார்த்திகேயன் ஆகியோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார். முடிவில் கல்லூரி முதல்வர் அக்பர் அலி நன்றி கூறினார்.