சென்னிமலை: சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளிக்கு சென்று வரும் அரசு டவுன் பஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னிமலையில் இருந்து தினமும் காலை 7.05 மணிக்கு சி9 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு அய்யம்பாளையம், திப்பம்பாளையம் மற்றும் பாலதொழுவு வழியாக திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வரை சென்று வருகிறது. இந்த பஸ் கடந்த 4 நாட்களாக தினமும் காலையில் சென்னிமலையில் இருந்து புறப்பட்டு ஊத்துக்குளிக்கு செல்வதில்லை என தெரிகிறது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி சென்று பின்னர் திருப்பூர் செல்லும் பயணிகள் மற்றும் பனியன் நிறுவன தொழிலாளர்கள் அனைவரும் சி9 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ்சில் பயணித்து வந்தோம். ஆனால் கடந்த 4 நாட்களாக திடீரென இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளோம். அதனால் உடனடியாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தலையிட்டு நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.




