ஈரோடு, ஆக. 20: ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 18 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். முன்னாள் ஜானதிபதி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5ம் தேதியை ஆண்டுதோறும் தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியை, ஆசிரியர்களை பாராட்டி ஒன்றிய அரசின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில நல்லாசிரியர் (ராதாகிருஷ்ணன்) விருது வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதுக்கு மேல்நிலை-உயர்நிலை பள்ளி அளவில் 5 பேருக்கும், தொடக்க-நடுநிலை பள்ளி அளவில் 5 பேருக்கும், தனியார் பள்ளிக்கு 1, மாற்றுத்திறனாளிகள் 1 என மொத்தம் 12 ஆசிரியை, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்காக ஆசிரியை, ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகளின் ஆசிரியை, ஆசிரியர்கள் என 18 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் விவர பட்டியல் பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஈரோடு மாவட்டத்தில் விண்ணப்பித்த 18 பேரில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.



