ஈரோடு, ஆக. 20: தமிழ்நாட்டில் ஜனநாயக முறைப்படி போராடும் உரிமையை பாதுகாக்ககோரி அம்பேத்கர் சிலையிடம் மனு வழங்கி மாணவர்கள் அமைப்பினர் முறையிட்டனர். தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வித்துறை மாணவ-மாணவிகள், இளைஞர்கள் போராட்டம், கிளர்ச்சிகளில் பங்கேற்பதை தடை செய்ய, ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சுற்றறிக்கை வெளியிட்டு, சிறிது நேரத்தில் திரும்ப பெறப்பட்டது.
இவ்வாறான அடக்குமுறை, சுற்றறிக்கை மிரட்டல்கள் கூடாது எனக்கோரி இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பில் பார்க்கில் த.வெ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நவீன், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். பின்னர், சட்ட மேதை அம்பேத்கர் சிலையிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
இந்திய வரலாறு என்பது முழுவதும் உரிமைகளுக்கான போராட்டங்களின் வரலாறாகும். போராட்டம் என்பது மக்களின் உரிமைகளுக்கான குரல் கொடுப்பதாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் குடிமக்களுக்கு பேச்சுரிமை கருத்துரிமை, எழுத்துரிமை, அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மிக முக்கியமானவை. ஆனால், தமிழ்நாட்டில் போராடக்கூடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒடுக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக குரலை ஒடுக்குவது இந்யித அரசியலைமைப்பு சட்டத்தின் அடிப்படை மாண்புகளுக்கு எதிரானதாகும். எனவே, போராடும் உரிமையை பாதுகாக்கவும், இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்யுவும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.



