அந்தியூர், ஆக.19: அந்தியூரில் ஓய்வு பெற்ற சார் பதிவாளர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்தியூர் அருகே உள்ள புது மஞ்சாள நாயக்கனூரை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ மார்ட்டின் (67). இவர் ஓய்வு பெற்ற சார் பதிவாளர். இவரது மனைவி ஷீலாமணி (62) ஓய்வு பெற்ற அரசு ஆசிரியை. இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சத்தியமங்கலம் சிக்கரம்பாளையத்திலுள்ள மகன் விஜய் பிராங்ளின் வீட்டுக்கு சென்று தங்கினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, மார்ட்டின் வீட்டிற்கு சென்ற உறவினர்கள் வீட்டு கதவு உடைந்திருந்ததைப் பார்த்து, ஜான் போஸ்கோ மார்ட்டினுக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் உரிமையாளர் அந்தியூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். நேற்று காலை 11.30 மணிக்கு வீட்டுக்கு வந்து ஜான் போஸ்கோ மார்ட்டின் மற்றும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையிலான போலீசார் உள்ளே பார்த்தனர்.
அப்போது, பீரோ உடைக்கப்பட்டு, 12 பவுன் எடை கொண்ட 7 தங்க வளையல்கள், 6 பவுன் எடையிலான 2 தங்க சங்கிலி என மொத்தம் 18 பவுன் நகைளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிந்தது. மேலும் கைரேகை நிபுணர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர், மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இவரது வீட்டின் அருகிலிருந்த டாக்டர் பேபி என்பவரின் வீட்டு பூட்டை கடப்பாறையால் உடைத்து திருட முயன்றனர். அங்கு எதுவும் கிடைக்காததால், ஓய்வு பெற்ற அலுவலர் தம்பதி வீட்டில் கைவரிசையை காட்டியுள்ளனர். இதுகுறித்து, வழக்குப்பதிந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



