Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குறிச்சி ஊராட்சியில் குடிநீர் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

பவானி, ஆக.19: அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், குறிச்சி ஊராட்சி செல்லிக்கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், பூனாச்சி ஊராட்சியில் செயல்படும் தனியார் மரவள்ளிக்கிழங்கு மாவு உற்பத்தி ஆலை மற்றும் எத்தனால் உற்பத்தி செய்யும் ஆலைகள் வெளியேற்றும் கழிவு நீரால் சுற்றுவட்டார பகுதியில் ஆழ்குழாய் கிணற்று நீர் குடிக்க பயனற்றதாக மாறியுள்ளது. காற்றும் மாசடைந்து, சுவாசக் கோளாறுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்று, குடிநீர் ஆதாரங்களை மாசுபடுத்தும் தனியார் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை இக்கிராமத்துக்கு வந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீருக்காக 3 கிமீ தொலைவிற்கு சென்று குடிநீர் எடுத்து வந்தும், கேன் தண்ணீர் வாங்கியும் பயன்படுத்தும் நிலை உள்ளது. குடிநீருக்கு அலையும் நிலை குறித்து பலமுறை மனு அளித்தும் பிரச்னை தீரவில்லை. எனவே, வரும் 18ம் தேதி குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காத்திருக்கும் போராட்டம் நடத்துவதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு என இக்கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.

எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செல்லிக்கவுண்டனூர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை நாளை 72ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக 2வது பெரிய அணையாக விளங்குகிறது. மேலும் தெற்காசியாவின் 2வது பெரிய மண் அணையாக விளங்கும் பவானிசாகர் அணை பல லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்கு பேரூதவியாக அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின் முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்த அணை கட்டப்பட்டது.

பவானி ஆறு மற்றும் மாயாறு என 2 ஆறுகள் சேருமிடம் கூடுவாய் என்று அழைக்கப்பட்டது. அந்த இடத்தில் அணை கட்டி நீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்தினால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே திட்டமிடப்பட்ட நிலையில், 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின் முதலாம் ஐந்து ஆண்டு திட்டத்தில் 1948ம் ஆண்டு அணை கட்டுமான பணி தொடங்கியது. இந்திய பொறியாளர்களை கொண்டு பல ஆண்டுகளாக கட்டுமான பணி நடைபெற்ற நிலையில் 1955ம் ஆண்டு கட்டுமான பணி நிறைவடைந்து ஆகஸ்ட் 19ம் தேதி அணை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அப்போது, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜர் அணையை நாட்டு அர்ப்பணித்தார். ரூ.10.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த அணையின் கட்டுமான பணிக்கு வெளிநாட்டில் இருந்து நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. அணையின் கரையின் மொத்த நீளம் 8.7 கிமீ ஆகும். 105 அடி உயரம் வரை நீர் தேக்கி வைக்கப்படும் வசதி கொண்ட இந்த அணையில் 32.8 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்டதாகும். அணை நீர் தேக்கத்தில் நீர் பரப்பு பகுதி 30 சதுர மைல்களாகும். அணையில் இருந்து 6க்கு 10 அடி அளவுள்ள 9 மதகுகளும், 5 வாய்க்கால் மதகுகளும், 36க்கு 20 அடி அளவுள்ள 9 வெள்ள உபரிநீர் போக்கி மதகுகளும் என மொத்தம் 23 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மதகுகள் மூலம் அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றும் திறன் கொண்டவையாகும். அணையிலிருந்து பழைய பாசன பரப்பான தடப்பள்ளி அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 24,504 ஏக்கர் நிலங்களும், காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,743 ஏக்கர் நிலங்களும், புதிய பாசன பரப்பான கீழ்பவானி பிரதான கால்வாய் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் என ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக கீழ்பவானி வாய்க்கால் பாசனம் தமிழகத்தில் 2வது பெரிய பாசன பகுதியாக விளங்குகிறது. பவானிசாகர் அணை கட்டப்பட்டதை தொடர்ந்து மானாவாரி நிலங்கள் நன்செய் நிலங்களாக மாறியது. வானம் பார்த்த பூமியாக இருந்த நிலங்களில் நெல் விளைந்ததால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. மேலும் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பவானிசாகர் அணை அவ்வப்போது பராமரிக்கப்பட்டு இன்றும் சிறிதும் உறுதித் தன்மை குறையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் பவானிசாகர் அணை கட்டப்பட்டதால் அங்கு உருவான பவானிசாகர் நகரத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் கட்டமைக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை அலுவலகங்கள், தமிழ்நாடு மனித வள மேலாண்மை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையம், ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், மஞ்சள் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்புடைய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையை அப்பகுதி மக்கள் தெய்வமாக கருதுகிறார்கள் என்றே கூறலாம்.