சத்தியமங்கலம், ஆக.18: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் யானைகள் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் நடமாடுகின்றன. இந்நிலையில், நேற்று காலை பண்ணாரி அம்மன் கோயில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கொம்பன் யானை திடீரென சாலையில் வாகனங்களை வழி மறித்தது. யானை சாலையின் நடுவே நடமாடுவதைக் கண்ட ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.
இதனால், அப்பகுதியில் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கும் இங்கும் நடமாடிய யானை பின்னர் மெதுவாக சாலை வனப்பகுதிக்கு சென்று வாகனங்கள் புறப்பட்டு சென்றது. பட்டப்பகலில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் சாலையில் செல்லும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறும், யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் அருகே செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



