8 மணி நேர வேலை, 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
அந்தியூர்,ஆக.17: அந்தியூர் அருகே உள்ள அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் சென்ட்ரல் ஆர்கனைசேஷன் ஆப் இந்தியா ட்ரேட் யூனியனின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்க மண்டல குழு உறுப்பினர் கார்த்திகேயன் வரவேற்றார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் சிவசங்கர் சிறப்புரையாற்றினார். தொழிலாளர்களுக்கு மாதம் முதல் தேதியில் சம்பளம் வழங்க வேண்டும், இந்த வருடம் வழங்க வேண்டிய 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
2022-23ம் ஆண்டு ஊதிய உயர்வு போனஸ் வழங்க வேண்டும் என்ற தொழிலாளர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும். 8 மணி நேர வேலை மற்றும் பெண் தொழிலாளர்கள் தங்குமிடம், கழிவறை வசதி செய்து தர வேண்டும். சட்டவிரோதமாக வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வில் உள்ள தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சங்க மாவட்ட துணைச் செயலாளர் பாபு நன்றி கூறினார்.



