சென்னிமலை,ஆக.17: சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்கால் குறுக்கே உள்ள பாலத்தின் கரைகள் தற்காலிகமாக சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறையில் இருந்து சென்னிமலை அருகே அத்திக்காடு வரை உள்ள இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த பணிகள் அனைத்தும் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் சென்னிமலை-காங்கயம் சாலையில் தோப்புக்காடு என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பாலத்தை 4 வழிச்சாலைக்காக விரிவுபடுத்தும் பணிகளும் நிறுத்தப்பட்டது.
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டால் தோப்புக்காடு பாலத்தை கடந்து தண்ணீர் செல்ல முடியாது என்பதால் இந்த பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்த செய்தி கடந்த மாதம் 28ம் தேதி தினகரன் நாளிதழில் வெளிவந்தது. கீழ்பவானி வாய்க்காலில் உயிர் தண்ணீர் திறந்து விடக்கோரி பாசன விவசாயிகள் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடந்து வருகிறது. அதனால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் எந்த நேரமும் உயிர் தண்ணீர் திறந்து விடலாம் என்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தோப்புக்காடு கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் அருகில் இரு கரைகளிலும் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.



