Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் கடும் வெயிலால் பசுந்தீவனம் பற்றாக்குறை அடர்தீவன விலை உயர்வால் பால் உற்பத்தி குறைந்தது

கோபி, ஆக.14: ஈரோடு மாவட்டத்தில் கடும் வெயிலால் பசுந்தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரித்து பால் உற்பத்தி குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்துமா? என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகி வருகிறது. மேலும், பருவமழை பொய்த்ததால், ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் வறட்சி நிலவுவதுடன், அணைகளில் நீர் இருப்பு இல்லாமல் விளை நிலங்களும் வறண்டு காணப்படுகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் கொளுத்தும் கோடை வெயில் காலம் முடிந்த பின்னரும் வாட்டி எடுக்கும் வெயிலால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குட்டி கோடம்பாக்கம் என அழைக்கப்படும் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேரடி கால்வாய் பாசன பகுதிகளை தவிர்த்த எஞ்சிய பகுதிகளில் முந்தைய ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வறட்சி பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. வறட்சியான நிலையால் கால்நடைகளுக்கான தேவையான பசுந்தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பசுந்தீவன பற்றாக்குறை ஒருபுறம் நிலவ மறுபுறம் மக்காச்சோளம், தவிடு, பருத்தி கொட்டை போன்ற மாட்டுத்தீவனங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இது பால் உற்பத்தி செலவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இந்த பகுதியில், நடக்கும் வழக்கமான பால் உற்பத்தியில் 20 சதவீதம் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து கவுந்தப்பாடி அருகே பனங்காட்டூரை சேர்ந்த பால் உற்பத்தியாளர் சக்திவேல் கூறுகையில்: ‘கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பால் உற்பத்தி குறைந்து வருகிறது. அடர் தீவனங்களான மக்காச்சோளம், பருத்திக்கொட்டை, கருக்காய் தவிடு ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளன. வறட்சியின் காரணமாக மழை இல்லாததால் பசுந்தீவனம் கிடைக்காத நிலையில் பால் உற்பத்தி குறைந்துள்ளது. அரசு கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே பால் உற்பத்தி செய்ய முடியும். பருத்திக்கொட்டையை தீவனமாக கொடுத்தால் பாலுக்கான பணம் கிடைக்காது. பசுந்தீவனம் பற்றாக்குறையால் உலர் தீவனம் கொடுக்கிறோம்.

8 லிட்டர் பால் கறக்கக்கூடிய மாடு இரண்டு லிட்டர் குறைந்து 6 லிட்டர் மட்டுமே கறக்கிறது. அதிக வெயிலால் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக மாடு, எருமைகளில் பால் குறைந்துள்ளது. மழையும் இல்லை. பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் தண்ணீரும் இல்லை. இதனால், பசுந்தீவனங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது பால் உற்பத்தியாளர்களை கடுமையாக பாதித்துள்ளது’’ என்றார்.

இதுகுறித்து கவுந்தப்பாடியை சேர்ந்த விவசாயி பழனிசாமி கூறுகையில்: ‘‘மாடு வளர்ப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் கோடை காலத்தை போலவே வெயில் சுட்டெரிப்பதால் தீவன பற்றாக்குறை உள்ளது. 40 முதல் 50 சதவீதம் உற்பத்தி திறன் குறைந்துள்ளது. ஆவினில் பால் ஊற்றும்போது டெஸ்ட்டும் குறைவாக இருப்பதால் கட்டுப்படி ஆவதில்லை. உற்பத்தி செலவுக்கும் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் தொகைக்கும் சரியாக இருக்கிறது. பால் கொள்முதலில் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. வறண்ட தீவனம் போடுவதால் பால் குறைந்துள்ளது. மழை இல்லாததால் பசுந்தீவனம் கிடைப்பதில்லை. இதனால் பால் அளவு குறைந்து வருகிறது’’ என்றார்.

தயிர்ப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி கூறும்போது: ‘‘பரம்பரையாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும் செய்து வருகின்றேன். முன்பு பால் லிட்டர் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு விற்றபோது கூட தவிடு ஐந்து ரூபாய்க்கு விற்றது. தற்பொது பால் 35 ரூபாய்க்கு கொள்முதல் விலை கிடைக்கிறது. ஆனால், ஒரு மூட்டை தவிடு ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. எதுவும் செய்ய முடிவதில்லை. கிராமப்புற 100 நாள் வேலைக்கு சென்றால்கூட 300 ரூபாய் கூலி கிடைக்கிறது. நாங்கள் மாட்டை வைத்துக்கொண்டு 200 ரூபாய்கூட சம்பாதிக்க முடியவில்லை. ஆறு மாதம் பால் கறக்கும் ஆறு மாதம் சும்மா வைத்து இருக்க வேண்டிய நிலை.

மாட்டை ஏன் வளர்க்க வேண்டும்? என்ற நிலைக்கு வந்து விட்டோம். 6 மாடுகள் வைத்திருந்த நான் தற்போது 2 மாடுகளை மட்டுமே வைத்துள்ளேன். 4 மாடுகளை விற்பனை செய்து விட்டேன். விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மிகவும் கவலைக்குரிய விஷயமாகிவிட்டது. கடந்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு மாட்டிற்கும் ஒரு லிட்டர் அளவிற்கு பால் குறைந்துவிட்டது. அரசு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மாடு வளர்க்க மானியம் வழங்க வேண்டும்’’ என்றார்.