Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை இழிவுப்படுத்தி வரும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஈரோடு, ஜூன் 13: ஈரோட்டில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை இழிவுப்படுத்தி வரும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நிர்வாகிகள் நேற்று மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:வீரப்பன்சத்திரத்தில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் சத்தியாவதி, கந்துமணி ஆகிய இருவரும் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்த ஆசிரியர்களின் புண்படும் வகையிலும், இவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் அடிக்கடி பேசி வருகிறார். இது குறித்து ஆசிரியர்கள் முறையிடும்போது, அவர்களைச் சமரசம் செய்வதும், இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்’ என்று உறுதி கூறுவதும் நடக்கிறது. ஆனால், மீண்டும் அதுபோன்ற தவறான செயலில் தலைமை ஆசிரியர் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியை ஆன சத்தியாவதிக்கு, கடந்த ஆண்டு மாடியில் வகுப்பறை ஒதுக்கப்பட்டது. பள்ளியில் மின்தூக்கி இல்லை.

ஆசிரியர் சத்தியாவதி மாடிப்படி ஏற முடியாது என்பது நன்கு தெரிந்திருந்தும், அவருக்கு மாடியில் வகுப்பறை ஒதுக்கியது பழிவாங்கும் செயல் ஆகும். அவரும், அவரைத் தொடர்ந்து எங்கள் சங்கமும் தலைமை ஆசிரியரை நேரில் பார்த்து, ஆசிரியை சத்தியாவதி மாடிப்படி ஏறமுடியாது என்பதை எடுத்துச் சொல்லி, தரைதளத்தில் வகுப்பறை ஒதுக்குமாறு கேட்டோம். அதன் பிறகு தான் தரை தளத்தில் வகுப்பறை ஒதுக்கப்பட்டது.

இந்தாண்டும், அதேபோன்று, ஆசிரியை சத்தியாவதிக்கு மாடியில் வகுப்பறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சத்தியாவதி நேரில் போய், தலைமை ஆசிரியரை பார்த்து, தரைதளத்தில் வகுப்பறை வேண்டும் என்று கேட்ட பிறகு, தரை தளத்தில் வகுப்பறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 8ம் தேதி, பள்ளியில் வழிபாட்டு கூட்டம் நடக்கும்போது, தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் வகுப்பறை இடமாற்றத்தைச் சொல்லி, “நடக்க இயலாத ஆசிரியர்களுக்காக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று பேசி இருக்கிறார்.

அவர் சொன்ன விதமும், சொன்ன இடமும் மாற்றுத் திறனாளி ஆசிரியை ஊனத்தைப் பொதுவெளியில் கேவலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த நியாயமற்ற செயல். இது குறித்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு நேரில் சென்று தனித் தனியாகப் புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியரின் தொடர்ச்சியான நடவடிக்கைகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களைத் திட்டமிட்டுப் பழிவாங்கும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. எனவே, மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை இழிவுப்படுத்தி வரும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.