ரோடு ஓரத்தில் ராட்டினங்கள் இயக்க தடை
அந்தியூர், ஆக.12: குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் அரசு விதிகளை மீறி மெயின் ரோட்டின் ஓரத்தில் ராட்டினங்கள் அமைத்ததால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் நாளை (13-ம் தேதி) முதல் 17-ம் தேதி வரை 5 நாட்கள் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் தேர் திருவிழா மற்றும் மாநில அளவிலான கால்நடைச்சந்தை நடக்கிறது. திருவிழாவின் போது மக்களை மகிழ்விக்க பொழுதுபோக்கு அம்சங்கள் மூலமாக விதவிதமான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவை அரசு விதிகளை மீறியும் பாதுகாப்பாற்ற முறையில் அந்தியூர்- பர்கூர் செல்லும் பிரதான சாலையில் மிக அருகில் அமைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கடந்த 9-ம் தேதி தினகரனில் செய்தி வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக வருவாய்த் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக நேற்று முன்தினம் ராட்டினங்கள் அமைக்கப்பட்டு இருந்த இடங்களை ஆய்வு செய்தனர்.பின்பு அரசு விதிமுறைகளை மீறி இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட ராட்டினங்கள் இயங்கக்கூடாது என தடை விதித்தனர். மேலும் பொது மக்களை மகிழ்விக்கும் விதம் எனக் கூறி அச்சம் ஏற்படுத்தும் வகையில், அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்களை இயக்கக் கூடாது எனவும் வருவாய்த்துறையினர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.