ஈரோடு, ஆக. 12: சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் சார்பில் 9வது ஆண்டாக இல்லத்தரசிகளின் தொழில் முனைவு சாதனைகளை அங்கீகரித்தும், அவர்களை ஊக்குவித்தும் ‘சுய சக்தி’ விருதுகள் மற்றும் ‘ஹோம்பிரெனர்’ விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு பிராண்ட் அவதார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமச்சந்திரன் தலைமை தாங்கினார். சக்தி மசாலா நிறுவனர் பி.சி.துரைசாமி, இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர்கள் ராஜ்மோகன், மரியவில்சன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசனர்.
இதில், ‘சுய சக்தி’ விருதுகளானது ஜிஆர்ஜி கல்வி நிறுவன நிர்வாகி நந்தினி ரங்கசாமி, டாக்டர் செளமியா அன்புமணி எம்எல்ஏ, ஐஏஎஸ் கவிதா ராமு ஆகியோருக்கு வழங்கபட்டது. அதேபோல், ‘ஹோம் பிரெனர்’ விருது சென்னையை சேர்ந்த சுவேதா ஜெஸி, உமாமகேஸ்வரி, சயாதேவி, ஹிலர் சங்கரி, சித்ரா லிங்கேஸ்வரன், திண்டுக்கலை சேர்ந்த கவிமகிழினி தங்கராஜ், மதுரையை சேர்ந்த காயத்ரி சிவகுமார், ஈரோட்டை சேர்ந்த செளந்தர்யா லட்சுமி ஆகிய 9 பேருக்கும் மற்றும் சுய சார்பு மகளிர்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகள் வழங்கபட்டன.
இந்நிகழ்ச்சியில், எம்.பி பிரவீன் சக்ரவர்த்தி, எம்எல்ஏ ராம்குமார், திரைப்பட நடிகர் சூரி, திரைப்படத்துறையினர், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், திரைப்படத்துறையினர், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




