Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரோடு ரயில்வே காலனியில் ஆமை வேகத்தில் நடக்கும் ஆர்பிஎப் வீரர்கள் ஓய்வறை கட்டுமான பணி

ஈரோடு, ஜூன் 11: ஈரோடு ரயில்வே காலனயில் ஆர்பிஎப் வீரர்களுக்கு ரூ.4.85 கோடியில் ஓய்வறை கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷனில் தங்கி பணியாற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த போலீசாருக்கு ரயில்வே காலனியில் ஓய்வு எடுக்க தனி ஓய்வறை கட்டிடம் உள்ளது. இங்கு 12 ஓய்வு அறைகள் இருந்தது. எனவே, கூடுதல் ஓய்வு அறைகள் அமைத்து தர கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம் புதிதாக ஓய்வறை கட்ட ரூ.4 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரயில்வே காலனியில் பழைய குடியிருப்பு அருகில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்காக கூடுதல் ஓய்வறை கட்டிட கட்டுமான பணி தொடங்கப்பட்டு மந்தமாகவே நடந்து வருகிறது.

இதில், 80 படுக்கை வசதிகளுடன் கூடிய ஓய்வறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் உள்ள ஓய்வறையில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டு, சமையல் அறையுடன் கட்டப்பட உள்ளது. ஆனால், பணிகள் தொடங்கியதில் இருந்து ஆமை வேகத்தில் நடந்து வருவதால், பணியை துரிதப்படுத்தி விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த புதிய ஓய்வறை கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தால், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், கரூர், திருப்பூர், கோவை, போத்தனூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் பணியாற்றும் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த போலீசார், பணி முடிந்ததும் ஓய்வு எடுக்க வசதியாக இருக்கும் என தெரிவித்தனர்.