அத்திக்கடவு - அவிநாசி நிலை 2 திட்டத்தில் விடுபட்ட 122 குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
சத்தியமங்கலம், டிச.10: பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள பனையம்பள்ளி, பெரிய கள்ளிப்பட்டி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, மாதம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் குளங்களுக்கு நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள் இணைக்கப்படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள் முறையிட்டபோது அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிலை இரண்டு திட்டத்தில் விடுபட்ட குளங்கள் இணைக்கப்பட்டு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறிய நிலையில், இதுவரையிலும் 122 குளங்களுக்கு தண்ணீர் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று புஞ்சை புளியம்பட்டி அருகே கோரிக்கையை வலியுறுத்தி விண்ணப்பள்ளி பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


