பவானி, டிச. 10: திமுகவில் சிறந்த நகரச் செயலாளர் விருது பெற்ற, பவானி தெற்கு நகர திமுக செயலாளர் ப.சீ.நாகராஜன் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். கடந்த 25 வருடங்களாக பவானி நகர திமுக செயலாளராக பதவி வகித்து வந்த இவர், திமுக அறிவித்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்றுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக கோவை சென்ற இவர், அங்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து பவானி மேற்கு தெருவில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு இருந்தது.
அமைச்சர்கள் சு.முத்துசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எம்எல்ஏ.க்கள் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமார், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், பவானி தொகுதி மேலிட பார்வையாளர் சச்சிதானந்தம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், துணைச்செயலாளர் கே.சரவணன், பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ஏ.சேகர், பவானி மத்திய ஒன்றிய பொறுப்பாளர் கா.சு.மகேந்திரன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


