வனப்பகுதியை ஒட்டிய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்; நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
அந்தியூர்,ஆக.10: வட்டக்காடு, கிழங்கு குழி வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் புகுந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது, பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.
வட்டக்காடு பகுதியில் உள்ள பாக்கியம்மாள் என்பவர் தோட்டத்தில் கரும்பு பயிரிடப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு அந்த தோட்டத்துக்கள் ஒற்றை யானை புகுந்தது. அது கரும்பு பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. நாய்கள் சத்தமிடுவதை வைத்து தோட்டத்துக்குள் யானை புகுந்திருப்பதை தெரிந்து கொண்ட விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த அந்தியூர் வனத்துறையினர் யானையை விரட்டியடித்தனர்.
இருப்பினும் கால் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு மற்றும் வாழைகள் சேதமடைந்தன. இதேபோல கிழங்கு குழியில் உள்ள பழைய மாரியம்மன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்துக்குள் புகுந்த யானை விவசாயப் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது.



