சென்னிமலை, ஆக.7: சென்னையில் இன்று நடைபெறும் தேசிய கைத்தறி தின விழாவிற்காக நேற்று மாலையில் சென்னிமலையில் இருந்து சென்னை செல்வதற்கு நெசவாளர்கள் தயாராக இருந்த நிலையில், திடீரென பயணம் ரத்து செய்யப்பட்டதால் நெசவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
12-வது தேசிய கைத்தறி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மாநில அளவில் தமிழ்நாடு கைத்தறித்துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் சார்பில் சென்னை உட்பட மாநிலம் முழுவதிலும் இருந்து சிறந்த கைத்தறி நெசவாளர்களை அழைத்து கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்ள சென்னிமலையில் இருந்து 15க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த சுமார் 20 நெசவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நேற்று மாலையில் இவர்கள் அனைவரும் சென்னைக்கு புறப்பட்டு செல்வதற்காக ஆவலோடு இருந்தனர். ஆனால் நேற்று காலை 10 மணியளவில் கைத்தறி நெசவாளர்களை சென்னை அழைத்து செல்வதற்கான நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அந்தந்த சங்கங்கள் மூலம் நெசவாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால், சென்னைக்கு செல்ல ஆவலோடு இருந்த சென்னிமலை பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து நெசவாளர்களிடம் எதுவும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.



