சென்னிமலை,ஆக.7: சென்னிமலை அருகே வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்திற்கு லேசான காயங்களுடன் வந்த புள்ளி மானை வனத்துறையினர் மீட்டனர். சென்னிமலை வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. இதில் சில மான்கள் அடிக்கடி கிராம பகுதிகளுக்கு வருவது வழக்கம்.நேற்று காலையில், சுமார் 3 வயது புள்ளிமான் ஒன்று சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றது.
அப்போது அங்குள்ள கம்பி வேலியை தாண்டி குதிக்கும்போது லேசான காயம் ஏற்பட்டு சாலையோரம் படுத்திருந்தது. இதனைக்கண்ட அந்த பகுதி மக்கள் சென்னிமலை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று காயத்துடன் கிடந்த புள்ளி மானை மீட்டு முதலுதவி செய்தனர். பின்னர் அந்த மானை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.




