Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரோடு மேட்டூர் சாலையில் புதைவட மின் கேபிளில் பழுது: இருளில் தவித்த பொதுமக்கள்

ஈரோடு, ஜூலை 6: ஈரோடு மேட்டூர் சாலையில் புதைவட மின் கேபிளில் பழுது ஏற்பட்டதால் பொதுமக்கள் இருளில் தவித்தனர். ஈரோடு ஈ.வி.என் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இருந்து புதை வடமாக அமைக்கப்பட்ட மின் கேபிள் மூலம், இடையன்காட்டு வலசு, வீரப்பன்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், விசைத்தறி தொழிற்சாலைகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் பயன்பெற்று வருகிறது. இந்நிலையில், 33 கே.பி திறன் கொண்ட அந்த புதை வட மின் கேபிளில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென பழுது ஏற்பட்டது.

இடையன்காட்டு வலசு, நசியனூர் ரோடு, அகில்மேடு வீதி, மேட்டூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து, கேபிள் பால்ட் டிடக்டிவ் கிட் என்னும் தொழில்நுட்ப உபகரணம் வாயிலாக பழுது ஏற்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மேட்டூர் சாலையில், ஜேசிபி இயந்திரன் உதவியுடன் குழி தோண்டி, பழுது ஏற்பட்ட மின் கேபிளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இடையன்காட்டு வலசு, நசியனூர் ரோடு, அகில்மேடு வீதி, மேட்டூர் சாலை உள்ளிட்ட பகுதி மக்கள் இருளில் தவித்தனர். மேலும், நேற்று பகலிலும் மின் இல்லாமல் குடியிருப்புவாசிகள் கடுமையாக அவதியுற்றனர். பின்னர் மாலை 4 மணிக்கே மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே, மேட்டூர் சாலையில் புதைவட மின் கேபிள் சீரமைக்கும் பணியால், அகில்மேடு வீதி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.