Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முறையான குடிநீர் வேண்டி சாலை மறியல் செய்ய முயற்சி

அந்தியூர், ஜூன் 6: அந்தியூர் அடுத்துள்ள ஆப்பக்கூடல் அருகே கூத்தம்பூண்டி ஊராட்சி மகாலிங்கபுரம் பகுதியில் சுமார் 40க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்களுக்கு கூத்தம்பூண்டியில் உள்ள பவானி ஆற்றில் இருந்து குடிநீர் மேல்நிலை தொட்டி மூலம் தேக்கிவைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதகாலமாக இப்பகுதியில் ஆற்று தண்ணீர் சரியாக விநியோகிக்கவில்லை. இது குறித்து கூத்தம்பூண்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அந்தியூர் யூனியன் அலுவலகத்தில் பலமுறை இப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை, பவானி-சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் மகாலிங்கபுரத்தில் காலிக்குடங்களுடன் அப்பகுதி பெண்கள் 20க்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபடுவதற்கு தயாராகி ரோட்டில் வந்து நின்றனர். அப்போது அங்கே வந்த ஆப்பக்கூடல் போலீஸ் எஸ்ஐ திருநாவுக்கரசு மறியலில் ஈடுபட முயன்ற பெண்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இது சம்பந்தமாக உரிய அதிகாரிகளிடம் பேசி, பின்னர் நேரடியாக பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது டிராக்டர் மூலம் தண்ணீர் உங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.