ஈரோடு, அக். 2: ஓய்வூதியர்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யக்கோரி ஓய்வூதிய அமைப்புகள் வலியுறுத்தினர். ஈரோடு காளைமாட்டு சிலை அருகே சர்வதேச முதியோர் தினத்தையொட்டி சிவில் ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஓய்வூதியர்கள் மற்றும் முதியோர்கள் எதிர்கொள்ளும் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலராளர் சின்னசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் ராமசாமி, ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஓய்வூதியர்களுக்கு கண்ணியமான வாழ்க்கைக்கான பென்சன் வழங்க வேண்டும். உடல் நலம் பேண, தரமான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும். ரயில், பஸ் போக்குவரத்து வசதிகளை பாதுகாப்பான சலுகை கட்டணத்தில் செய்து கொடுக்க வேண்டும். தனித்து வாழும் மூத்த குடிமக்களுக்கு உரிய வீடும், பாதுகாப்பு வசதிகளும் செய்ய வேண்டும். 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மாற்றியமைக்க வேண்டும். 65, 70, 75 வயதுகளில் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி ஓய்வூதியர்களின் உதவியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், ஓய்வூதிய அமைப்புகளின் நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


