ஈரோடு, அக. 2: ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் மண்டிக்கிடக்கும் புதர்களை மழைக்காலத்திற்கு முன்பாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு, 1964ம் ஆண்டு காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. இது, 12 ஏக்கர் பரப்பில், 0.5 டி.எம்.சி., நீரை சேமிக்கும் வசதியுடன், நீர் போக்கியாகவும் செயல்பட்டது. மழை நீர் மற்றும் கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் இங்கு சேகரமாகும். இங்கிருந்து நஞ்சை ஊத்துக்குளி வரையிலான பகுதிக்கு கால்வாய் மூலம், 2,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டன.
இதனால், 2005க்குப்பின், அணைக்கட்டில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. அத்துடன் அணைக்கட்டும் தூர்ந்து, மண் மேடாகி தண்ணீர் சேமிக்க முடியாமல் போனது. இதனால், அணைக்கட்டு பகுதியிலும், 200க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி, ஆக்கிரமிக்கப்பட்டன. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வீடுகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி, நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலும் தூர் வாரப்பட்டது.
இந்நிலையில், சூரம்பட்டி அணைக்கட்டில் தேங்கி நிற்கும் தண்ணீர் தெரியாத வகையில் ஆகாயத்தாமரை முழுவதுமாக படர்ந்து உள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் மதகு உள்ள பகுதியிலும் ஆகாயத்தாமரை அடைத்து உள்ளது. இதனால், வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.


