Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி காதில் பூ சுற்றி விவசாயிகள் நூதன போராட்டம்

சத்தியமங்கலம், ஜூலை 1: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் நூதன முறையில் காதுகளில் பூக்களை சுற்றியபடி கலந்து கொண்டனர்.

தேர்தல் அறிக்கை வாக்குறுதி படி 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் ஜோதி, அருணாச்சலம், வேலுமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.