சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 15 ஆண்டு சிறை: திண்டுக்கல் போக்சோ கோர்ட் தீர்ப்பு
திண்டுக்கல், நவ. 15: காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அருள்பிரசாத் (21). இவர் கடந்த 2024ல் பள்ளி சிறுமி ஒருவரிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அருள்பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சத்தியதாரா தீர்ப்பு வழங்கினார். இதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அருள்பிரசாத்துக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.